ADDED : ஜன 24, 2026 06:23 AM

சென்னை: சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில், கிழக்கு திசை வளிமண்டல அலை வீசுகிறது. தென் மாநிலங்கள் மீது, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணா மலை, விழுப்புரம், கடலுார் ஆகிய ஏழு மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்.
ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

