UPDATED : ஆக 07, 2025 06:56 AM
ADDED : ஆக 07, 2025 06:45 AM

சென்னை: வளி மண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், கோவை, நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் அதிகபட்சமாக, 12 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், 10; அதே மாவட்டம் திருபுவனம், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தலா, 8; மதுரை மாவட்டம் இடையப்பட்டியில், 7; ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் ஆகிய இடங்களில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ராயலசீமா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, விழுப்புரம், செங் கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், இன்று கன மழை பெய் ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.