ADDED : மே 29, 2026 05:48 AM

சென்னை: 'தமிழகத்தில், தேனி, திண்டுக்கல் உட்பட எட்டு மாவட்டங்களில், இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில், சில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கத்திரி நிறைவு தமிழகத்தில், கோடை வெயிலின் உச்சகட்டமான கத்திரி வெயில், மே 4ல் தொடங்கியது. இந்த ஆண்டு, கத்திரி வெயில் காலத்தில், அதிகபட்சமாக, 108 டிகிரி பாரன்ஹீட் வரை, வெயிலின் தாக்கம் இருந்தது. அந்த கத்திரி வெயில் காலம், நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
எனினும், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், இன்றும் நாளையும், இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகம் பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
