ADDED : அக் 17, 2026 11:58 PM
சென்னை: சென்னையில் நேற்றிரவு இடைவிடாமல், நான்கு மணி நேரத்திற்கு மேலாக, கனமழை கொட்டி தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
தமிழகத்தில், கோடையை மிஞ்சும் வகையில், மூன்று மாதங்களாக வெயில் வறுத்தெடுத்து வந்ததால், மக்கள் பெரிதும் திண்டாடினர். காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளிலும் சிக்கித் திணறினர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை 7:00 மணிக்கு லேசான மழை தொடங்கியது. படிப்படியாக மழை வேகம் எடுத்தது. இரவு 11:00 மணி வரையும் விடாது கன மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பல இடங்களிலும் மின் தடை ஏற்பட்டதால், மக்கள் திணறினர்.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை காரணமாக, வானில் மேகக்கூட்டம் அதிகமாக திரண்டதால், இரவு 11:00 மணிக்கு மேலும் விடாது, கனமழை தொடர்ந்தது. ஏற்கனவே, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், 12 செ.மீ., வரை மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதையும் தாண்டி மிக கன மழை பெய்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
