ADDED : மே 19, 2026 06:05 AM

சென்னை: 'தமிழகத்தில், நீலகிரி, கோவை உட்பட, ஆறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகபட்சமாக, கோவை மாவட்டம், சின்னக்கல்லார், திண்டுக்கல் மாவட்டம், அய்யலுார் பகுதியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
தற்போது, மேற்கு மத்திய பிரதேசம் முதல், தெற்கு உள் கர்நாடகம் வரை, மத்திய மஹாராஷ்டிரா, மராத்வாடா மற்றும் வட உள் கர்நாடகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
அதேபோல், தெற்கு கடலோரம், ஆந்திர பிரதே சம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மற்றும் வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன், லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு.
இன்று, நீலகிரி, கோவை, ஈரோடு,சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி , மின்னலுடன், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெப்ப நிலையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக் கால் பகுதிகளில், இன்றும், நாளையும், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறையும்.
வரும் 21, 22ம் தேதிகளில், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை ஒட்டியே இருக்கும். சென்னையில் இன்று, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
