ADDED : ஏப் 05, 2026 03:41 AM
சென்னை: 'கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை, உள் கர்நாடகா வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில், நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி, மின்னலுடன், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் சில இடங்களில், நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதேபோல், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெப்ப நிலையை பொறுத்தவரை, வரும் 7ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
நேற்று, தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் 104.54 டிகிரி; மதுரை விமான நிலையம் 104; மதுரை நகரம் 102.92; திருச்சி 102.74; கரூர் பரமத்தி 102.56; ஈரோடு 101.84; திருத்தணி 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
