UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:26 PM
சென்னை: ‘தமிழக மலை மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, அழகரை எஸ்டேட் பகுதிகளில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. தற்போது, தமிழகம் மற்றும் தெற்கு உள்கர்நாடகா வரை, 0.9 கி.மீ., உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. அதனால், கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யலாம்.
திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
