UPDATED : அக் 22, 2025 02:40 PM
ADDED : அக் 21, 2025 10:59 PM

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் நிலையில், 'ரெட் அலெர்ட்' விடப்பட்ட கடலுார், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று அதிகனமழை கொட்டித் தீர்த்தது. அதைத் தொடர்ந்து இன்றும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், அதிகனமழை பெய்யும் என்பதால், 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 11 மாவட்டங்களில், மிக கனமழை பெய்யும் என்பதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுமைய தென் மண்டல தலைவர் பி.அமுதா கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் ஆகிய இடங்களில் மிக கனமழை, அதாவது, 17 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.
இது தவிர, சென்னை, கடலுார், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 22 இடங்களில், 7 முதல் 11 செ.மீ., வரை கனமழை பதிவாகிஉள்ளது.
புயல் உருவாகுமா?
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை, 5:30 மணிக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காலை 8:30 மணியளவில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவியது.இந்த சூழல், இன்று மதியம், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
பின்னர் இது, வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது.இந்த நிலை, புயலாக மாறுமா என்பதை இன்று தான் கணிக்க முடியும். இதே சமயத்தில், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சு ழற்சி ஒன்று நிலவுகிறது.
இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு, தமிழகத்தில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று அதிகனமழை, அதாவது, 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், இன்று மிக கனமழை அதாவது, 11 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.
சேலம், திருச்சி, வேலுார், திருப்பத்துார், தர்மபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட் டையில், நாளை மிக கனமழையும், வேலுார், திருப்பத் துார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக இருக்கும்; ஒருசில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

