இன்றும் நாளையும் கனமழை 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இன்றும் நாளையும் கனமழை 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
ADDED : அக் 08, 2024 10:36 PM
சென்னை:வளிமண்டல சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம், 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையம் அறிக்கை:
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. லட்சத்தீவு மற்றும் கேரள பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
இது, படிப்படியாக வலுவடைந்து, இன்று அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகலாம். அதன்பின், புயல் சின்னமாக வலுவடையவும் வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில், தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார் மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.