ADDED : அக் 04, 2024 11:10 PM
சென்னை:வடக்கில் இருந்து வரும் வெப்பக்காற்று காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
வங்கக்கடலில், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டிய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லை. இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த பின்னணியில், வடக்கில் இருந்து வரும் வெப்பக்காற்று காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, வரும் 9ம் தேதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.