இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை: கோவை, திருப்பூரில் மக்கள் பாதிப்பு
இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை: கோவை, திருப்பூரில் மக்கள் பாதிப்பு
ADDED : ஏப் 06, 2025 02:25 AM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி, மின்னலுடன் பெய்த மழை, கோடை வெப்பத்தை தணித்த நிலையில், சில இடங்களில் பயிர் சேதம், இடி தாக்கி விபத்து போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
கோவை, திருப்பூர்
தொடர்ந்து மூன்றாவது நாளாக கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கனமழை வெளுத்து வாங்கியதால், உக்கடம், ரேஸ்கோர்ஸ், செஞ்சிலுவை சங்கம் உட்பட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
திருப்பூர் மாநகரில், இரவு, 11:30 மணிக்கு துவங்கி, மூன்று மணி நேரம், கனமழை நீடித்தது. மண்ணரை, அறிவொளி நகர் உட்பட தாழ்வான பகுதிகளில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. கொங்கு மெயின் ரோட்டில், நுால் கிடங்கு ஒன்றில் வெள்ள நீர் புகுந்ததால், நுால் மூட்டைகள் சேதமாகின. அவிநாசி தாலுகா, கருவலுாரில், வீடு சேதமடைந்தது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நெல் சாகுபடி அறுவடை பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால், திருநெல்வேலி, மானுார் அருகே பள்ளமடை பகுதியில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் நனைந்து சேதமடைந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில், 24 மணி நேரத்தில் கோபியில் அதிகபட்சமாக, 15.5 செ.மீ., மழை பெய்துள்ளது. பவானிசாகர் வனப்பகுதி மற்றும் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்ததில், அணைக்கு நீர்வரத்து, 6,214 கன அடியாக நேற்று அதிகரித்தது. கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடுப்பணையில் நேற்று சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
- நமது நிருபர் குழு -