பல மாவட்டங்களில்! 16ம் தேதி முதல் கனமழை பெய்யும்: வங்கக்கடலில் காற்றழுத்த சுழற்சி
பல மாவட்டங்களில்! 16ம் தேதி முதல் கனமழை பெய்யும்: வங்கக்கடலில் காற்றழுத்த சுழற்சி
ADDED : செப் 14, 2025 01:02 AM

சென்னை: 'வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த சுழற்சி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில், வரும், 16ம் தேதி முதல், நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில், தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வளி மண்டல சுழற்சி காரணமாக, பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், கடந்த 24 மணி நேரத்தில், மிதமான மழை பெய்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, புதுச் சேரியில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில், 7; விழுப்புரம் மாவட்டம் வளவனுார் மற்றும் புதுச்சேரியில் தலா, 6 செ.மீ., மழை பெய்துள்து.
இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காலை, மத்திய மேற்கு, அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிஷா கடலோர பகுதிகளில் நிலவுகிறது.
இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிஷா மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சத்தீஸ்கர் பகுதிகளை, அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லும். மேலும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன், வரும், 16 முதல் 19ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேநேரம், வரும், 16ல், வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில், கன மழை பெய்யும்.
வரும், 17ல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும், 18ல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும். மேலும், வரும் 19ல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

