ADDED : மே 27, 2025 06:30 AM

சென்னை: 'தென்மேற்கு பருவக்காற்று துவக்கம் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான எட்டு மாவட்டங்களில், மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில், 35 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் மேல் பவானியில், 30; கோவை மாவட்டம் சின்னகல்லாரில், 21; நீலகிரி மாவட்டம் எமரால்டு, 18; கூடலுார் பஜார், 15; பந்தலுார் தாலுகா அலுவலகம், 14; மேல் கூடலுார், கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம், வால்பாறையில் தலா 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகலாம்.
தென்மேற்கு பருவக்காற்றும் பரவலாகி உள்ளதால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி மின்னலுடன் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில், இன்றும், நாளையும், கன முதல் மிக கனமழை பெய்யலாம்.
திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில், 29ம் தேதி கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், 29ல் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.