ADDED : டிச 13, 2024 05:23 AM

சென்னை: 'தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலு குறைந்து திசை மாறியதால், 13 மாவட்டங்களில் இன்று(டிச.,13) கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, நேற்று பகல் நிலவரப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் நிலவுகிறது. இந்த அமைப்பு படிப்படியாக வலு குறைந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவலாம். இதனால், தென் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்கள், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 15 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.