கனமழை இன்று 19 மாவட்டங்களில்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கனமழை இன்று 19 மாவட்டங்களில்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : செப் 17, 2025 01:29 AM
சென்னை:தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட, 19 மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து,பாதுகாப்பு ஏற்பாடுகளை வருவாய், பேரிடர் மேலாண்மை துறை தீவிரப்படுத்தி உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை சைதாப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இடி, மின்னலுடன், மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் இன்றும், நாளையும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல், செப்., 20 வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரே சமயத்தில், 19 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. கன மழையால் பாதிப்பு ஏற்பட்டால், உடனவடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாலையில் அதிகரிக்கும் தன்னார்வ வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது:
வளி மண்டல சுழற்சி ஒரு பக்கம் இருந்தாலும், வடமேற்கு வெப்ப காற்று மற்றும் நீராவி குவிதல் தமிழகத்தில் நிகழ்கிறது. அதே சமயத்தில், கிழக்கில் இருந்து வரும் குளிர்ந்த காற்று அதில் சேர்வதால், தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரியில் துவங்கி மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என, மழை அடுத்தடுத்த பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது. இன்று பகலிலேயே மழை துவங்கினாலும், மாலையில் இது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

