'ஹெபடைடிஸ் பி, சி' தொற்று: 187 நாடுகளில் உயிரிழப்பு அதிகம்
'ஹெபடைடிஸ் பி, சி' தொற்று: 187 நாடுகளில் உயிரிழப்பு அதிகம்
ADDED : ஜன 18, 2025 02:28 AM
சென்னை:குணப்படுத்தக்கூடிய 'ஹெபடைடிஸ் பி மற்றும் சி' தொற்றால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ரோடெரிகோ ஆப்ரின் கூறினார்.
சென்னை கல்லீரல் அறக்கட்டளை சார்பில், இந்திய கல்லீரல் அழற்சி நோய் குறித்த இரண்டு நாள் மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது. இதில், ரோடெரிகோ ஆப்ரின் பேசியதாவது:
கல்லீரல் செல்கள் சேதமடைந்தாலோ அல்லது தொற்றுக்கு உள்ளானாலோ அழற்சி ஏற்படுகிறது.
அதனால், வீக்கமும், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்பும் உருவாகிறது. ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ, வகை தொற்றுகள் குறைந்த காலமும், நாள்பட்ட வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பு மற்றும் புற்று நோய்க்கு வழிவகுக்கின்றன.
உலகில், 187 நாடுகளில் கல்லீரல் அழற்சியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது, புள்ளிவிபரங்களின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
அவற்றில், 83 சதவீத உயிரிழப்புகள் 'ஹெபடைடிஸ் பி' தொற்றாலும், 13 சதவீத உயிரிழப்புகள் 'ஹெபடைடிஸ் சி' தொற்றாலும் ஏற்படுகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரண்டுமே தடுக்கக்கூடிய பாதிப்புகள் தான்.
துவக்க நிலை மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டால், கல்லீரல் அழற்சி தீவிரமடையாமல் தடுக்க முடியும். உலகம் முழுதும் 2.9 கோடி பேர் 'ஹெபடைடிஸ் பி' பாதிப்புக்கும், ஐந்து லட்சம் பேர் 'ஹெபடைடிஸ் சி' பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி ஆகிய மூன்று முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதை இந்தியாவும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
கல்லீரல் அழற்சியை, 2030க்குள் வேரறுப்பதற்கான இலக்கை அடைவதற்கான காலம் வெகு துாரத்தில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய காசநோய் தடுப்பு திட்ட முதன்மை ஆலோசகர் சவுமியா சாமிநாதன் பேசுகையில், ''கொரோனா தொற்று நமக்கு பல்வேறு படிப்பினைகளை தந்துள்ளது. அந்த தொற்று குறித்து முதலில் எவருக்கும் தெரியாது. அதற்கான தடுப்பூசிகளோ, மருந்துகளோ அப்போது இல்லை.
அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து, கொரோனா தொடர்பான முடிவுகளை எடுத்ததை போன்று, கல்லீரல் அழற்சிக்கும் தீர்வு காண வேண்டும்,'' என்றார்.