'விசாரணையில் போலீசார் நாள் கடத்துவது கடமை தவறுதலும், அலட்சியமுமாகும்' நீதித்துறை அதிகாரிகளுக்கும் ஐகோர்ட் 'அட்வைஸ்'
'விசாரணையில் போலீசார் நாள் கடத்துவது கடமை தவறுதலும், அலட்சியமுமாகும்' நீதித்துறை அதிகாரிகளுக்கும் ஐகோர்ட் 'அட்வைஸ்'
ADDED : ஜன 24, 2025 01:02 AM
சென்னை:'சிக்கலான குற்ற வழக்குகளை விசாரிப்பதில் போலீசார் தொடர் கண்காணிப்பு இன்றி செயல்படுவது, கடமையிலிருந்து தவறுதல் மற்றும் அலட்சிய மனப்பான்மை என்றே கொள்ள வேண்டி இருக்கிறது. அத்தகைய வழக்குகளை விசாரிக்கவும், பயிற்சி அளிக்கவும் மாவட்ட, மாநில அளவில் பிரத்யேக குழு அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 30. இவர், கடந்தாண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நாகராஜ் மனைவி கஜலட்சுமி மனு தாக்கல் செய்தார்.
26 வழக்குகள்
இம்மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டவர், 'ஏ பிளஸ்' பிரிவு குற்றவாளி என, போலீசார் வகைப்படுத்தி உள்ளனர். அவர் மீது, கொலை உட்பட, 26 வழக்குகள் உள்ளன. அந்த வழக்கு விபரங்களின் பட்டியலை, காவல் துறை தாக்கல் செய்துள்ளது.
இதில், பல வழக்குகள் இன்னும் புலன் விசாரணை நிலையிலேயே உள்ளன என்பது அறிக்கை வாயிலாக தெரிகிறது; இது, அதிர்ச்சியளிக்கிறது.
விசாரணையை முடிக்கவே, காவல் துறை 10 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்துக் கொண்டால், விசாரணை எப்போது முடிவடையும்; குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்?
நம்பிக்கை
இது, நீதிமன்றத்துக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. உரிய காலத்துக்குள் புலன் விசாரணையை முடித்து, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு தண்டனை பெற்று தருவதன் வாயிலாக, சட்டத்தின் மீது பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னும், அதை ஆய்வு செய்து விசாரணைக்கு எடுக்காமல், ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன என, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு, காவல் துறை அதிகாரிகளின் போதிய தொடர் கண்காணிப்பு இல்லாததே காரணம். இந்நடவடிக்கை, கடமையில் இருந்து தவறுதல் மட்டுமின்றி அலட்சியமாகும்.
மாநில அளவில் குழு
சிக்கலான வழக்குகளின் விசாரணையை முறையாக நடத்தவும், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நடைமுறைகளை பின்பற்றி, வழக்குகளை திறமையாக விசாரிக்க, திறமையான காவல் அதிகாரிகளை கொண்ட பிரத்யேக புலனாய்வு குழுக்கள், தாலுகா, மாவட்ட மற்றும் மாநில அளவில் அமைக்கப்படுவது அவசியம்.
சிக்கலான தன்மை கொண்ட குற்றங்களை விசாரிக்க, இன்றைய சூழ்நிலையில் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. விசாரணையை கண்காணிக்கவும், விசாரணை நடத்தவும், பல்வேறு நிலைகளில் பிரத்யேக குழுக்களை நியமிப்பது மிக முக்கியமானது. அரசு மற்றும் டி.ஜி.பி., இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குற்ற வழக்குகள் சார்ந்த நீதிமன்ற நடவடிக்கைகளில், நீதித்துறை அதிகாரிகள் எந்த தாமதமும் செய்யக்கூடாது.
விசாரணை தாமதமாவதை தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையை முடிப்பதிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும், விசாரணைகளை நடத்துவதிலும் ஏற்படும் விவரிக்க முடியாத தாமதத்தை ஏற்க முடியாது.
குற்ற வழக்குகள் முறையாக கையாளப்படுகின்றனவா என்பது குறித்து நடத்தப்படும் ஆய்வு கூட்டங்களை, டி.ஜி.பி., உள்துறை செயலர் கண்காணிக்க வேண்டும்.
மேலும், விசாரணை தாமதம் மற்றும் சாட்சி பாதுகாப்பு திட்டம் உருவாக்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

