மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவை கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி
மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவை கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி
ADDED : மே 27, 2025 08:38 PM
சென்னை:பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 80 சதவீத மாற்றுத்திறனாளி பெண்ணின், 28 வார கருவை கலைக்க அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர், 27 வயது பெண். இவருக்கு திடீரென கை, கால்கள் செயலிழந்தன. இதையடுத்து, 80 சதவீதம் மாற்றுத்திறனாளியான அவரை, கடந்த ஏப்ரலில் பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதன் காரணமாக, அப்பெண் கருவுற்றார். இந்த விபரம் அறிந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் தாய், மாமல்லபுரம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். பக்கத்து வீட்டுக்காரர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கருவை கலைக்க செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை அணுகிய போது, 28 வார கருவை கலைக்க மருத்துவமனை மறுத்து விட்டது.
அதனால், கருவை கலைக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
அனுமதிக்கத்தக்க காலக்கெடுவான 24 வாரத்தை கடந்து விட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, கருவை கலைக்கலாம்.
எனவே, மருத்துவ குழு அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வு செய்து, கருவை கலைக்க அனுமதித்தால், செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன், உடனே கருவை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மேல் கலைக்க முடியாது என்றால், அந்த தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.