ADDED : நவ 22, 2024 01:54 AM
சென்னை:சாம்சங் ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி, அதன் துணை நிறுவனமான, 'எஸ்.எச்.எலக்ட்ரானிக்ஸ்' நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட சி.ஐ.டி.யு., சங்கத்தின் செயலர் முத்துக்குமார், உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி, உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தீர்ப்புகள் உள்ளன என்றும், ஜனநாயக ரீதியில் போராட, அரசியலமைப்பு சட்டம் அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன், உண்ணாவிரதப் போராட்டம் தவிர்த்து, மற்ற வகையிலான போராட்டத்தை, வரும் 30ம் தேதி நடத்த அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார்.