விதிமீறல் கட்டடங்கள் விவகாரம் நீதிமன்றங்கள் இனி சகிக்காது: உயர் நீதிமன்ற கிளை காட்டம்
விதிமீறல் கட்டடங்கள் விவகாரம் நீதிமன்றங்கள் இனி சகிக்காது: உயர் நீதிமன்ற கிளை காட்டம்
ADDED : ஜூன் 24, 2025 05:47 AM

மதுரை: 'விதிமீறல் கட்டட விவகாரத்தில், சம்பந்தப் பட்ட அதிகாரிகளின் செயலற்ற தன்மையை நீதிமன்றங்களால் இனி பொறுத்துக்கொள்ள முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக தெரிவித்தது.
திருச்சி மாவட்டம், புங்கனுார் டேனியல் சிமியோன் சுதன் தாக்கல் செய்த மனு:
புங்கனுாரில் கட்டட திட்ட வரைபட அனுமதியின்றி ஒரு அரிசி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்றக்கோரி கலெக்டர், ஸ்ரீரங்கம் தாசில்தாருக்கு புகார் அனுப்பினேன். அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுள்ளது என்பதை அதன் உரிமையாளர் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. வரன்முறைப்படுத்துதல் மூலம் இச்சட்டவிரோதத்தை சரிசெய்ய முடியும் என கூறுகிறது.
நகர் புறம் மற்றும் கிராமப்புறங்களில் சட்டம், விதிகளின்படி உரிய அதிகாரிகளிடமிருந்து கட்டட திட்ட அனுமதியை பெற்ற பின்னரே கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும்.
அனுமதியற்ற மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை வழக்கமான நடைமுறைகள்படி அதிகாரிகளால் வரன்முறைப்படுத்த முடியாது.
சட்டவிரோதம்
வரன்முறைப்படுத்துதலை உரிமையாக கோர முடியாது. அனுமதியற்ற கட்டுமானங்கள் மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயலற்ற தன்மையை நீதிமன்றங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அனுமதியற்ற கட்டுமானங்களை தடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சட்டவிரோத அனுமதியற்ற கட்டுமானத்தை வரன்முறைப்படுத்துவது ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு வழிவகுக்கும். ஒவ்வொருவரும் அனுமதியற்ற கட்டுமானத்தை அமைத்துவிட்டு, பின்னர் வரன்முறைப்படுத்த கோரி விண்ணப்பிப்பர். இதனால், சட்டம், விதிகளின் நோக்கம் தோற்கடிக்கப்படும்.
விதிமீறல் கண்டறியப்பட்டால் கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, பின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற பல உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளபோதிலும் அதிகாரிகள் மவுனமாகவே இருக்கின்றனர். அவர்களின் செயலற்ற தன்மை தொடர்கிறது.
சட்டவிரோத கட்டுமான வழக்குகளை கையாளும்போது கடுமையான அணுகுமுறை வேண்டும். வரன்முறைப்படுத்துவதை உடனடியாக அனுமதிக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டுமானங்களை தடுக்க உயர்நிலை கண்காணிப்புக் குழுவை அமைத்து. 2024 மார்ச் 1ல் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டது.
நடவடிக்கை
இக்குழு அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுதல், கட்டடங்களை தவறுதலாக வணிக நோக்கத்திற்காக மாற்றுவதை தடுத்தல், விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி செயல் திட்டம் தயாரிக்கும்.
விதிமீறல் கட்டடங்களை ஆய்வு செய்தல், சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அளித்தல், அக்கட்டடங்களை அகற்றுதல், பூட்டி 'சீல்' வைக்க உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். மாதம் ஒருமுறை கூடி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது இக்குழுவின் பணி.
உயர்நிலை கண்காணிப்புக் குழு, அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்கிறதா என்பதை அரசு தரப்பில் தெளிவுபடுத்தவில்லை.
குழு திறம்பட செயல்படாவிடில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் நோக்கம் பயனற்றதாகிவிடும்.
உயர்நிலை கண்காணிப்புக் குழு மாதம் ஒருமுறை கூடி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதை தமிழக தலைமை செயலர் உறுதிசெய்ய வேண்டும்.
குழு செயல்பாடுகளை அரசு அவ்வப்போது கண்காணித்து, அரசின் உத்தரவை செயல்படுத்த தவறிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வழக்கில் அனுமதியற்ற கட்டுமானம் என அடையாளம் காணப்பட்டால், சட்ட நடைமுறைகளை பின்பற்றி அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.