பெருமாள்கோவில்பட்டியில் கார்த்திகை தீபம்: தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் அமர்வு தடை
பெருமாள்கோவில்பட்டியில் கார்த்திகை தீபம்: தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் அமர்வு தடை
ADDED : டிச 20, 2025 05:27 AM

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துறை அருகே பெருமாள்கோவில்பட்டி யைச் சேர்ந்த சித்தன் பால்ராஜ்.
இவர், 'பெருமாள்கோவில்பட்டி மண்டு கருப்பணசாமி கோவிலை மீண்டும் திறந்து, தினசரி பூஜை நடத்தவும், காளியம்மன் கோவில் மற்றும் கருப்பணசாமி கோவில் முன், கார்த்திகை தீப திருவிழா நடத்த அனுமதி வழங்கவும் ஆத்துார் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்' என, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
டிச., 2ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'மனுவில் குறிப்பிட்டுள்ள இடங்களில் கார்த்திகை தீபத்திருவிழா நடத்த அனுமதிக்கப்படுகிறது. பக்தர்களின் உரிமை நிலைநாட்டப்படுவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால், 'கலெக்டர் சரவணன், ஆர்.டி.ஓ., திருமலை, ஆத்துார் தாசில்தார் முத்துமுருகன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, சித்தன் பால்ராஜ் மனு தாக்கல் செய்தார்.
இதை டிச., 3ல் அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கலெக்டர், எஸ்.பி., அன்றே ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி, கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே, திண்டுக்கல் ஆர்.டி.ஓ., ஆத்துார் தாசில்தார், சின்னாளபட்டி இன்ஸ்பெக்டர் தரப்பில் தாக்கல் செய்த ரிட் மேல்முறையீட்டு மனுவில், 'அது அரசு புறம்போக்கு நிலம்.
நிலம் மற்றும் தீபம் ஏற்றும் உரிமை குறித்து சிவில் வழக்கில் தான் தீர்மானிக்க முடியும்.
'தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல. அது பதற்றமான பகுதி. 21 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
ஒரு கொலை நடந்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிட்டனர்.
ரிட் மனுவில் எதிர்மனுதாரர்களில் ஒருவரான பெருமாள்கோவில்பட்டி சவரிமுத்து, மற்றொரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், சவரிமுத்து தரப்பில் வழக்கறிஞர் ஜான் வின்சென்ட் ஆஜராகினர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஜன., 19க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர்.

