அமெரிக்கா செல்ல அனுமதி கோரும் அசோக்கிடம் உயர் நீதிமன்றம் கொக்கி
அமெரிக்கா செல்ல அனுமதி கோரும் அசோக்கிடம் உயர் நீதிமன்றம் கொக்கி
ADDED : ஜூலை 22, 2025 11:57 PM
சென்னை:'அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் பெயர், விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட, 13 பேருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் நடந்து வருகிறது.
அசோக்குமார் தரப்பில், இதய அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக் குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில், 'மனுதாரரை விசாரணைக்கு ஆஜராகும்படி, ஒன்பது முறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஒரு முறை கூட ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அமெரிக்காவில் மேற்கொள்ள உள்ள சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டது.
அப்போது, 'இந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்கள் அமெரிக்காவில் எதுவும் இருக்கிறதா' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில், 'அவ்வாறு இல்லை' என, பதில் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் பெயர், விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தாக்கல் செய்யும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் வழங்கும் தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து, அமலாக்கத்துறை ஆய்வு செய்ய அறிவுறுத்தி, வரும் 29ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.