திருச்சியில் மீண்டும் பசுமைப்பூங்கா ஐகோர்ட் கிளை உத்தரவு
திருச்சியில் மீண்டும் பசுமைப்பூங்கா ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : ஜூலை 02, 2025 10:36 PM
திருச்சி,:திருச்சியில் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட பசுமைப்பூங்காவை மீண்டும் அமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க, மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுஉள்ளது.
திருச்சி -- எடமலைப்பட்டி புதுார் தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில், மாநகராட்சி, பொதுமக்கள், தனியார் அமைப்புகள் பங்களிப்புடன், 22.50 ஏக்கரில் பசுமைப்பூங்கா, 2003ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டதால், பசுமைப்பூங்கா இடத்தில் காய்கறி சந்தை அமைக்க முடிவெடுக்கப்பட்டது; இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆயினும், பசுமைப்பூங்காவில் ஒருபகுதியில் மரங்களை வெட்டி, இடத்தை சுத்தம் செய்து, காய்கறி சந்தை அமைப்பதற்காக முதல்வர் ஸ்டாலினால் கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து, பசுமைப்பூங்காவின் 250 மரங்கள் அகற்றப்பட்டன.
மார்க்கெட் அமைக்க பசுமைப்பூங்கா முழுதும் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், பசுமைப்பூங்காவை அகற்றக்கூடாது என, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வு, பொதுமக்கள் பங்களிப்பில் அமைக்கப்பட்ட பசுமைப்பூங்காவை மீண்டும் அனைத்து வசதிகளுடன், 11 ஏக்கரில் அமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டனர்.