கமிஷனருக்கு லஞ்சம் தர முயற்சி தனிப்படை போலீஸ் விசாரணை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
கமிஷனருக்கு லஞ்சம் தர முயற்சி தனிப்படை போலீஸ் விசாரணை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
ADDED : அக் 04, 2024 02:17 AM
மதுரை:திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனருக்கு தனியார் நிறுவன நிர்வாகி லஞ்சம் தர முயன்ற வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அசோக்குமார், அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர். இவர் திருநெல்வேலியில் அரியநாயகபுரம் குடிநீர் திட்டப் பணியை மேற்கொள்ள குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்பந்த பணி எடுத்தார்.
திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணி திருநெல்வேலி மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. மாநகராட்சி கமிஷனரை அவரது அலுவலகத்தில் அசோக்குமார், சில மாதங்களுக்கு முன் சந்தித்து, லஞ்சம் கொடுக்க முயன்றார்.
கோபம் அடைந்த கமிஷனர், தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, திருநெல்வேலி ஜங்ஷன் போலீசில் புகார் அளித்தார். அசோக்குமார், உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: கமிஷனரை மரியாதை நிமித்தமாக மனுதாரர் சந்தித்தார். லஞ்சம் கொடுக்கவில்லை.
இவ்வாறு கூறினார்.
நீதிபதி: மனுதாரர் 230 கோடி ரூபாய்க்கு ஒப்பந்த பணியை மேற்கொண்டுள்ளார். இத்திட்டப் பணி மனுதாரருக்கு எப்படி கிடைத்தது; அவர் எப்படி திட்டத்தை செயல்படுத்தினார் என்பது தெரியவில்லை.
போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை தென் மண்டல எஸ்.பி., தனிப்படையை அமைத்து விசாரிக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.

