sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொது வினியோகத் திட்டத்திற்கு பெரும் தொகை செலவிடும் அரசுகள்: உயர்நீதிமன்றம் கருத்து

/

பொது வினியோகத் திட்டத்திற்கு பெரும் தொகை செலவிடும் அரசுகள்: உயர்நீதிமன்றம் கருத்து

பொது வினியோகத் திட்டத்திற்கு பெரும் தொகை செலவிடும் அரசுகள்: உயர்நீதிமன்றம் கருத்து

பொது வினியோகத் திட்டத்திற்கு பெரும் தொகை செலவிடும் அரசுகள்: உயர்நீதிமன்றம் கருத்து


UPDATED : மே 30, 2025 06:30 AM

ADDED : மே 30, 2025 06:10 AM

Google News

UPDATED : மே 30, 2025 06:30 AM ADDED : மே 30, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பொது வினியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க மத்திய, மாநில அரசுகள் நெல் கொள்முதல் செய்கின்றன. இத்திட்டத்திற்காக அரசுகள் பெரும் தொகையை செலவிடுகின்றன என கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வாணிப கழக மேலாளராக பணிபுரிந்தவரின் 'சஸ்பெண்ட்' காலத்தை விடுப்பு காலமாக கருத உத்தரவிட்டது.

தமிழக நுகர்பொருள் வாணிப கழக ராமநாதபுரம் மண்டல மேலாளராக பணிபுரிந்தவர் சவுந்தரபாண்டி. இவர் 2017 ஜூன் 30 ஓய்வு பெற்றார். அவருக்கு எதிராக 2015ல் குற்றச்சாட்டு குறிப்பாணை (சார்ஜ் மெமோ) வழங்கி ஒழுங்கு நடவடிக்கை துவங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 'சஸ்பெண்ட்' காலத்தை சம்பளம் இல்லாத விடுப்பாக கருதி 2016 ல் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து சவுந்தரபாண்டி வாணிப கழக இயக்குனர் குழுவில் மேல்முறையீடு செய்தார். அதை இயக்குனர் குழு 2017 டிச.,22 ல் நிராகரித்தது.

சவுந்தரபாண்டி,''இரு உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும். 2015 மே 13 முதல் 2016 ஜன.,11 வரையிலான 'சஸ்பெண்ட்' காலத்தை பணி செய்த காலமாக கருத வேண்டும். அதற்குரிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்,'' என, உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு: ராமநாதபுரம் மண்டலத்திலுள்ள 4 நெல் கொள்முதல் மையங்களில் மோசடி நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நேரத்தில் 39 கொள்முதல் மையங்கள் இருந்தன. மண்டலத்திலுள்ள அனைத்து கொள்முதல் மையங்களையும் மண்டல மேலாளரால் கண்காணிக்க, மேற்பார்வையிட முடியாது. ஊடக செய்தி அடிப்படையில் மனுதாரருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை துவங்கப்பட்டது. மனுதாரர் விளக்கமளித்துள்ளார்.

வாணிப கழகம் தரப்பு: மங்கள்குடி, சாந்தகுளம் மற்றும் வைகை கொள்முதல் மையங்களை மனுதாரர் ஆய்வு செய்யத் தவறி விட்டார். இது பில் எழுத்தர்கள் வினியோக ரசீதுகளை தவறாக பயன்படுத்த, வியாபாரிகள் நெல்லில் கலப்படம் செய்ய வழிவகுத்தது. தரமற்ற நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டது. வாணிப கழகத்திற்கு ரூ.9 லட்சத்து 62 ஆயிரத்து 400 இழப்பு ஏற்பட்டுள்ளது. கொள்முதலில் ஈடுபட்ட ஊழியர்களை மேற்பார்வையிடுவதில் மனுதாரர் கடமையை நிறைவேற்றத் தவறினார். இதன் மூலம் வாணிப கழகத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டது.ஊடக செய்தி அடிப்படையில் மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.

கொள்முதல் மையங்களில் விஜிலன்ஸ் பிரிவு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் 'சார்ஜ்மெமோ' வழங்கப்பட்டது.மண்டலத்திலுள்ள எந்த கொள்முதல் மையத்திற்கும் மனுதாரர் சென்றதில்லை. இது கொள்முதல் மையங்களில் முறைகேடுகள் நடக்க வழிவகுத்தது. இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி: பொது வினியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க மத்திய, மாநில அரசுகள் நெல் கொள்முதல் செய்கின்றன. இத்திட்டத்திற்காக அரசுகள் பெரும் தொகையை செலவிடுகின்றன. கொள்முதல் மையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் தரத்தை உறுதி செய்வதில் அரசுகள் பல்வேறு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளன.

ஒரு மண்டல மேலாளர் தனது மண்டலத்திலுள்ள கொள்முதல் மையங்களில் நடைபெறும் எந்தவொரு முறைகேடுகளுக்கும் பொறுப்பல்ல என்பதை மனுதாரர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது. முறைகேடுகள் கடுமையானவை. இது ஒரு மையத்தில் அல்ல; 4 மையங்களில் நடந்துள்ளது. தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் சரியான முறையில் செயல்படுவதை உறுதி செய்வதற்காக உயர் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

ராமநாதபுரம் மண்டலத்திலுள்ள 4 கொள்முதல் மையங்களில் சம்பந்தப்பட்ட நேரத்தில் நடந்த மோசடிக்கு தான் பொறுப்பல்ல என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை இந்நீதிமன்றம் ஏற்க விரும்பவில்லை. ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியால் விதிக்கப்பட்ட தண்டனையில் இந்நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. விதிமுறைகள்படி 'சஸ்பெண்ட்' காலத்தை விடுப்பு காலமாக கருதுவதில் நிவாரணம் பெற மனுதாரருக்கு உரிமை உண்டு. அதன்படி இம்மனு பகுதியளவு அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர் மீதான 'சஸ்பெண்ட்' காலத்தை தகுதியான விடுப்பு காலமாக கருத வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us