அமலாக்கத்துறை ஒன்றும் 'சூப்பர் போலீஸ்' அல்ல ஐகோர்ட் கண்டனம்
அமலாக்கத்துறை ஒன்றும் 'சூப்பர் போலீஸ்' அல்ல ஐகோர்ட் கண்டனம்
ADDED : ஜூலை 21, 2025 05:44 AM

சென்னை : 'தங்கள் கவனத்துக்கு வரும் அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத் துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல' என சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
கடந்த 2006ல் நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் சென்னையை சேர்ந்த, 'ஆர்.கே.எம்.பவர்ஜென்' நிறுவனத்துக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. அதேபோல அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சி.பி.ஐ., தாக்கல் செய்த கூடுதல் அறிக்கை அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் ஆர்.கே.எம்.பவர்ஜென் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 901 கோடி ரூபாய் வங்கி 'பிக்சட் டிபாசிட்' தொகையை முடக்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஆர்.கே.எம்.பவர்ஜென் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. தங்கள் கவனத்துக்கு வரும் அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத்துறை 'சூப்பர் போலீஸ்'அல்ல.
எனவே வங்கி நிரந்தர வைப்பீட்டு தொகையை முடக்கி அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.