குற்ற வழக்குகள் விசாரணையில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் உயர் நீதிமன்றம் கண்டிப்பு
குற்ற வழக்குகள் விசாரணையில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் உயர் நீதிமன்றம் கண்டிப்பு
ADDED : பிப் 17, 2025 12:44 AM
சென்னை: 'குற்ற வழக்குகள் விசாரணையில், புகார்தாரர்களின் உணர்வுகளை, புலன் விசாரணை அதிகாரிகள் புரிந்து கொள்வதில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ், முன் விரோதம் காரணமாக, 2023ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பேரளம் காவல் நிலைய போலீசார், அப்பகுதியை சேர்ந்த விஸ்வா, ஜெயகுமார், சுப்பிரமணியன் உள்ளிட்ட எட்டு பேர் மீது, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, திருவாரூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், 'என் மகன் விஜய், குற்ற சம்பவத்தை மொபைலில் வீடியோவாக எடுத்துள்ளார். குற்றவாளிகள் மிரட்டியதால், உயிருக்கு பயந்து மொபைல் போனை கொடுக்கவில்லை.
'அதை, விசாரணை அதிகாரியிடம் வழங்கியும், அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே, வழக்கில் என் மகனையும் சாட்சியாக சேர்க்க வேண்டும்' என, இறந்த கனகராஜின் உறவினரும், வழக்கின் சாட்சியுமான குருசாமி, விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதை விசாரணை நீதி மன்றம் ஏற்கவில்லை. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் குருசாமி வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:
குற்ற வழக்குகள் விசாரணையின் போது, சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை, உரிய காலத்துக்குள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பின், அந்த ஆவணங்கள், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு வழங்கப்பட வேண்டும்.
அவை முறையாக வழங்கப்பட்டதா என, அமர்வு நீதிமன்றம் சரிபார்த்து, குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரர் அந்த ஆவணம் குறித்து புகார் அல்லது அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடவில்லை. குற்றப்பத்திரிகையில் மின்னணு ஆதாரங்கள் காட்டப்படாததால், விசாரணை நீதிமன்றம் மனுதாரரின் மனுவை பரிசீலிக்க மறுத்துள்ளது.
மனுதாரர் சம்பந்தப்பட்ட மின்னணு ஆதாரங்களை, விசாரணை அதிகாரி யிடம் கொடுத்துள்ளார். துரதிருஷ்டவசமாக, அந்த அதிகாரி புலன் விசாரணை நடத்தவில்லை. இதனால், குற்றப்பத்திரிகையில் அந்த ஆவணம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது முதல் வழக்கு அல்ல.
பெரும்பாலான குற்ற வழக்குகளின் விசாரணையில், புலன் விசாரணை அதிகாரிகள், மெத்தனமாக செயல்படுகின்றனர். பொதுமக்கள் மற்றும் புகார்தாரர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை.
பல வழக்குகளில், காவல் துறையினர் நடத்தும் விசாரணை முறை குறித்து, நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. எனவே, குற்ற வழக்குகளின் புலன் விசாரணையின் போது, சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி, காவல்துறை அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.