ADDED : டிச 20, 2024 12:30 AM
சென்னை:'பொது தகவல் அலுவலர்கள் முறையாக தகவல் அளிக்காததால், தாக்கல் செய்யப்பட்ட 27 மேல்முறையீட்டு மனுக்களை, 12 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்' என, தமிழக மாநில தகவல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டப்படி வரும் மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்கள், 30 நாட்களுக்குள் பதில் தர வேண்டும்.
பதில் கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட நபர், அதே துறையில் உள்ள உயரதிகாரியிடம், முதலாவது மேல்முறையீட்டை செய்யலாம். அதிலும், பதில் கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட நபர், இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை, மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு வரும் மனுக்கள், வரிசை முறையில் பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில், தகவல் ஆணைய அதிகாரிகள் சரிவர செயல்படுவதில்லை என்ற, புகார் கூறப்படுகிறது.
இந்த வகையில், சென்னை பல்லாவரத்தைச் சேர்த்த சமூக ஆர்வலர் ரத்னபாண்டியன், 11 துறைகள் தொடர்பாக, 27 மேல் முறையீட்டு மனுக்களை தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுக்களை, மாநில தகவல் ஆணையம் விசாரிக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரத்னபாண்டியன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அளித்த தீர்ப்பில், 'இந்த வழக்கில் மனுதாரர் குறிப்பிடும் 27 இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களை, 12 வார காலத்துக்குள் தகவல் ஆணையம் விசாரித்து முடிக்க வேண்டும். இந்த உத்தரவு கிடைத்த நாளில் இருந்து காலவரம்பு கணக்கிடப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.