பழநி கோயில் கிரி வீதியில்வியாபாரிகளை அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
பழநி கோயில் கிரி வீதியில்வியாபாரிகளை அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : பிப் 21, 2024 06:26 AM
மதுரை: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவல வீதிகளில் சாலையோர வியாபாரிகளை அனுமதிக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் மாவட்ட சாலையோர சிறு விற்பனையாளர் தொழிலாளர் சங்கம் செயலாளர் ஜெயசீலன் தாக்கல் செய்த பொதுநல மனு:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவல வீதியில் சங்க உறுப்பினர்கள் போக்குவரத்திற்கு இடையூறின்றி வியாபாரம் செய்தனர். சாலையோர வியாபாரிகள் என அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை.முன்னறிவிப்பின்றி கோயில் நிர்வாகம், பழநி நகராட்சி, போலீஸ் தரப்பில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தினர்.
இது சட்டத்திற்கு புறம்பானது. போக்குவரத்திற்கு இடையூறின்றி சாலையின் இருபுறமும் மஞ்சள் வண்ணம் குறியீடு செய்து ஒதுக்கிய இடங்களில் வியாபாரிகளை (தைப்பூச திருவிழாவின்போது 10 நாட்கள், பங்குனி உத்திர திருவிழாவின்போது 10 நாட்கள் தவிர்த்து) அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
கோயில் தரப்பு: வியாபாரிகளை அனுமதித்தால் இடையூறு ஏற்படும்.
நீதிபதிகள்: கிரிவலப் பாதை கோயில் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு வியாபாரிகளை அனுமதிக்க முடியாது என இந்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இது பொதுநல வழக்கு என்பதற்கான முகாந்திரம் இல்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

