பெரும் செலவில் ரோடு அமைக்க உத்தரவிட முடியாது; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
பெரும் செலவில் ரோடு அமைக்க உத்தரவிட முடியாது; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஜூன் 07, 2025 10:53 PM
மதுரை : துாத்துக்குடி-திருச்செந்துார் ரோட்டை சீரமைக்க தாக்கலான வழக்கை 'பெரும் செலவில் ரோடு அமைக்க அல்லது மறுசீரமைப்பு செய்ய உத்தரவிமுடியாது. தள்ளுபடி செய்யப்படுகிறது' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி பொன் காந்திமதிநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:
துாத்துக்குடி- திருச்செந்துார் வரை 40 கி.மீ., ரோட்டில் துறைமுகம், உப்பளங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இவ்வழியாக திருச்செந்துார் கோயிலுக்கு பக்தர்கள் செல்கிறார்கள். ரோடு சேதமடைந்துள்ளது.
போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுகிறது. ரோட்டை சீரமைக்கக்கோரி மாநில நெடுஞ்சாலைத்துறை செயலர், தலைமைப் பொறியாளர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரியா கிளீட் அமர்வு:
மனுதாரர் கோரும் நிவாரணத்தின் தன்மையானது அரசின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது. நிதி தொடர்பான இத்தகைய கொள்கை முடிவுகளை, பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும். உயர்நீதிமன்றம் அதிகாரங்களை பயன்படுத்தி, பெரும் செலவை உள்ளடக்கிய ரோடுகளை அமைக்க அல்லது மறுசீரமைப்பு செய்ய உத்தரவை பிறப்பிக்க முடியாது.
அரசு தரப்பு,'இது தொடர்பாக ஏற்கனவே ஒரு திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளது. மனுவில் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது; தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.