ஞானதிரவியம் மீதான வழக்கு ஆவணங்களை கேட்கும் ஐகோர்ட்
ஞானதிரவியம் மீதான வழக்கு ஆவணங்களை கேட்கும் ஐகோர்ட்
ADDED : ஜூலை 18, 2025 10:25 PM
சென்னை:தி.மு.க., முன்னாள் எம்.பி., ஞானதிரவியம் மீதான வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க, திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., முன்னாள் எம்.பி., ஞானதிரவியம். இவரது ஆதரவாளர்கள், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ., திருமண்டல அலுவலகத்துக்குச் சென்ற, இட்டேரி பகுதியைச் சேர்ந்த மத போதகர் காட்ப்ரே வாஷிங்டன் நோபல் என்பவரை, 2023ம் ஆண்டு ஜூன் 26ல் தேதி தாக்கியதாக கூறப்படுகிறது.
மத போதகர் அளித்த புகாரில், ஞானதிரவியம் உட்பட 33 பேர் மீது, பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ஞானதிரவியம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் விசாரணையை விரைந்து முடிக்க, திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில், மத போதகர் காட்ப்ரே வாஷிங்டன் நோபல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார்.
அப்போது காவல் துறை தரப்பில், 'முன்னாள் எம்.பி., மீதான வழக்கின் விசாரணை, செப்., 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
'இவ்வளவு நீண்ட இடைவெளிக்கு தள்ளி வைக்கப்பட்டது ஏன்' என, கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்குகளை விரைந்து முடிக்கவே சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறி, ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி, திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். மனு மீதான விசாரணையை, வரும் 21க்கு தள்ளிவைத்தார்.