/
செய்திகள்
/
தமிழகம்
/
உத்தரவை அலட்சியப்படுத்திய அரசு அதிகாரிகளுக்கு சிறை தண்டனை, அபராதம் விதித்து ஐகோர்ட் அதிரடி 4 தாசில்தார்களுக்கு ஜெயில்; கலெக்டர், டி.ஆர்.ஓ.,வுக்கு அபராதம்
/
உத்தரவை அலட்சியப்படுத்திய அரசு அதிகாரிகளுக்கு சிறை தண்டனை, அபராதம் விதித்து ஐகோர்ட் அதிரடி 4 தாசில்தார்களுக்கு ஜெயில்; கலெக்டர், டி.ஆர்.ஓ.,வுக்கு அபராதம்
உத்தரவை அலட்சியப்படுத்திய அரசு அதிகாரிகளுக்கு சிறை தண்டனை, அபராதம் விதித்து ஐகோர்ட் அதிரடி 4 தாசில்தார்களுக்கு ஜெயில்; கலெக்டர், டி.ஆர்.ஓ.,வுக்கு அபராதம்
உத்தரவை அலட்சியப்படுத்திய அரசு அதிகாரிகளுக்கு சிறை தண்டனை, அபராதம் விதித்து ஐகோர்ட் அதிரடி 4 தாசில்தார்களுக்கு ஜெயில்; கலெக்டர், டி.ஆர்.ஓ.,வுக்கு அபராதம்
ADDED : மே 24, 2025 08:48 PM
சென்னை:நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில், கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் கிராந்தி குமார் பாடீல், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் பி.கே.கோவிந்தன் ஆகியோருக்கு, தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேல், கோவை ஆதிதிராவிடர் நல சிறப்பு தாசில்தார் ஸ்ரீமாலதி, மதுக்கரை தாசில்தார் ஏ.சத்யன், வெள்ளலுார் வி.ஏ.ஓ., விஜயகுமார் மற்றும் திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ராமன் ஆகியோருக்கு, தலா ஒரு மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.
கோவை மாவட்டம், கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த ஜான் சாண்டி, 74, என்பவருக்கு சொந்தமாக, சின்னவேடம்பட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அதற்கான பட்டாவில், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட இருவர் பெயரை நீக்க வேண்டும் என, அவர் மனு அளித்தார்.
அவமதிப்பு வழக்கு
அது தொடர்பான வழக்கில், இரண்டு மாதங்களில் பிரச்னையை தீர்த்து வைக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் 2023 நவம்பர் 8ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை குறித்த காலத்தில் அமல்படுத்தவில்லை என, கோவை மாவட்ட முன்னாள் கலெக்டரும், தற்போதைய தமிழக திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநருமான கிராந்தி குமார் பாடீல், மாவட்ட வருவாய் அதிகாரி எம்.ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் பி.கே.கோவிந்தன், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேல், கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., யமுனா ஆகியோருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் ஜான் சாண்டி, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் அளித்த கோரிக்கை மனு மீது உரிய விசாரணை நடத்தி, இரண்டு மாதங்களுக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, குறித்த காலத்தில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கவில்லை.
உத்தரவை நிறைவேற்றுவதில் அக்கறையின்மை, அலட்சியத்தை அதிகாரிகள் காட்டியுள்ளனர். இத்தகைய செயல், அவமதிப்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளது.
எனவே, கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் கிராந்திகுமார் பாடீல், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, கோட்டாட்சியர் பி.கே.கோவிந்தன், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேல் ஆகியோர் மட்டும், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளனர்.
இவர்களில் கோவை வடக்கு தாலுகா தாசில்தார் தவிர்த்து, மற்ற மூவருக்கும் தலா, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, மூவரும் தங்கள் சொந்த ஊதியத்தில் இருந்து, மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.
அதேநேரம் உத்தரவை அமல்படுத்த வேண்டிய தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், ஒரு மாத ஊதியத்தை, மனுதாரருக்கு இழப்பீடாக அவர் வழங்க வேண்டும்.
மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தாசில்தாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வழக்கில், வி.ஏ.ஓ., யமுனா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேல் முறையீடு
இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், குன்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த சங்கர், தனி பட்டா கோரி வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல, கோவை வெள்ளலுார் பகுதியை சேர்ந்த முருகாத்தாள் என்பவர், தன் புகார் மனு மீது இறுதி முடிவு எடுக்கும் முன், பெருமாள் என்பவருக்கு இ- - பட்டா வழங்கக்கூடாது என, வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, இருவரும் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார்.
இதில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ராமன், கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல சிறப்பு தாசில்தார் ஸ்ரீமாலதி, மதுக்கரை தாசில்தார் ஏ.சத்யன், வெள்ளலுார் வி.ஏ.ஓ., விஜயகுமார் ஆகியோருக்கு, தலா ஒரு மாத சிறை தண்டனையும், தலா, 25,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், அபராத தொகையை மனுதாரர்களுக்கு இழப்பீடாக வழங்கவும், தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக, ஒரு மாதம் நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார். அபராத தொகையை அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யவும் கூறியுள்ளார்.