பதிவு பெறாத ஜாதி கட்சிகளை தடை செய்ய வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
பதிவு பெறாத ஜாதி கட்சிகளை தடை செய்ய வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜன 10, 2025 11:51 PM
மதுரை:மதுரை வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
நவீன யுகத்திலும் தீண்டாமை உருமாற்றம் பெற்று வன்கொடுமையாக மாறுகிறது.
அனைத்து சமூகங்களிலும், சிலர் சுயநலனுக்காக அவர்கள் சார்ந்துள்ள ஜாதியின் பெயரால் ஒரு அமைப்பை உருவாக்குகின்றனர். அதை தேர்தல் கமிஷனில் முறையாக பதிவு செய்வதில்லை; தேர்தலிலும் போட்டியிடுவதில்லை.
ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சார்ந்து செயல்படுகின்றனர்.
வாழ்வாதாரத்தை பெருக்க பொதுவெளியில் வெறுப்பு பேச்சுகளால் இளைஞர்களிடம் வன்மத்தை துாண்டுகின்றனர்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில், 'யு டியூப்' சேனல்களை உருவாக்கி வெறுப்புணர்வை துாண்டி, சமூக அமைதியை சீர்குலைக்கின்றனர். ஜாதிகளின் பெயரில் சங்கங்களை உருவாக்குவோரில் சிலர், விதிகள்படி செயல்படுவதில்லை. ஆண்டறிக்கை தாக்கல் செய்வதில்லை.
பெயரளவிற்கு பதிவு செய்து, பிற சமூகத்தினரை இழிவுபடுத்தி வெறுப்புணர்வை விதைக்கின்றனர். இதை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது; இதுவரை, நடவடிக்கை இல்லை.
தேர்தல் கமிஷனில் முறையாக பதிவு பெறாத, தேர்தலில் போட்டியிடாத அனைத்து ஜாதி கட்சிகள், சங்கப் பதிவு சட்டப்படி முறையாக செயல்படாத ஜாதி சங்கங்கள், ஜாதி சார்ந்து செயல்படும், 'யு டியூப்' சேனல்களை தடை செய்யக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு, தமிழக உள்துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர்கள், டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, பிப்., 19க்கு ஒத்திவைத்தது.

