அனைத்து மருத்துவமனைகளிலும் தீயணைப்பு கருவி இடம்பெற வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
அனைத்து மருத்துவமனைகளிலும் தீயணைப்பு கருவி இடம்பெற வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜன 09, 2025 11:10 PM
மதுரை:அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் தீயணைப்பு கருவிகள் இடம் பெற தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் தீயணைப்பு கருவிகள் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். எச்சரிக்கை அலாரம் இருக்க வேண்டும். அவசரநிலையை கையாள ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தீப்பொறிகள் ஏற்படாமல் தடுக்க மின் சாதனங்களை சரியாக பராமரிக்க வேண்டும். உரிய துறையிடமிருந்து தீ தடுப்பு பாதுகாப்பு அனுமதிச் சான்று பெறாமல் கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கக்கூடாது.
அச்சான்றுகளை காலாவதியாவதற்கு முன் புதுப்பிக்க வேண்டும். மின் சாதனங்கள் பொருத்த ஒப்புதல் சான்று பெற வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் அவசரகால வெளியேறும் வாயில் ஏற்படுத்த வேண்டும். உயிர், உடைமைகளுக்கு சேதம் ஏற்படாத வகையில் கட்டட வடிவமைப்பு, கட்டுமானம் இருக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் தரமான உணவு, குடிநீர், படுக்கை, கழிப்பறை வசதி செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று, இந்திய மருத்துவக் கவுன்சில் இயக்குனர் ஜெனரல், மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு பிப்., 20க்கு ஒத்திவைத்தது.