ADDED : மே 08, 2025 01:01 AM

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத், மாரடைப்பால் உயிரிழந்தார்.
தஞ்சாவூரை சேர்ந்த மாவட்ட நீதிபதியாக இருந்த ஜெய்பிரசாத் மற்றும் லட்சுமி தம்பதிக்கு, 1969 மார்ச், 15ல் பிறந்தவர் சத்யநாராயண பிரசாத். வேலுாரியில் பள்ளிப்படிப்பையும், சென்னை லயோலா கல்லுாரியில் பட்டப்படிப்பையும், டில்லியில் முதுநிலை மற்றும் சட்டப்படிப்பையும் முடித்தார்.
பின், 1997ம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்து, வழக்கறிஞர் இளங்கோவனிடம், 2000ம் ஆண்டு வரை ஜூனியராக பணியாற்றினார். பின், சிவில், கிரிமினல் மற்றும் அரசியலமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கினார். பல்வேறு நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும், வழக்கறிஞராகவும் பணிபுரிந்துள்ளார்.
கடந்த, 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக சத்யநாராயண பிரசாத், 56 நியமிக்கப்பட்டார். இவர், ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்றாண்டுகள் இருக்கின்றன.
இதற்கிடையே, சென்னை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீட்டில் இருந்து, கீழ்ப்பாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற அவர், வீடு திரும்பும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவரது உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. நீதிபதி மறைவையொட்டி, விடுமுறை கால வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை.

