டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்., விருது இடைக்கால தடையை ரத்து செய்தது ஐகோர்ட்
டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்., விருது இடைக்கால தடையை ரத்து செய்தது ஐகோர்ட்
ADDED : டிச 14, 2024 01:00 AM
சென்னை:சங்கீத கலாநிதி விருதை, மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இசை உலகில் பிரபலமானவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி; 2004ல் மறைந்தார். இவரது பேரன் சீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
என் பாட்டியின் மறைவுக்குப் பின், அவரது நினைவைப் போற்றும் வகையில், 2005 முதல், மியூசிக் அகாடமியும், ஆங்கில நாளிதழும் இணைந்து, 'சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது' வழங்கி வருகின்றன.
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என் பாட்டி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு எதிராக, அவதுாறு கருத்துகளை பரப்பியவருக்கு விருது வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உரிமையில்லை
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க இடைக்கால தடை விதித்தது. அதே நேரத்தில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல், விருதை வழங்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், மியூசிக் அகாடமி தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 'எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உயிலில் குறிப்பிடப்பட்டிருந்த பயனாளிகளில், சீனிவாசனும் ஒருவர். மற்ற வர்களின் பிரதிநிதியாக வழக்கு தொடர அவருக்கு உரிமையில்லை.
'எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க, உயிலில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இவற்றை எல்லாம் தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை' எனக் கூறப்பட்டுள்ளது.
உத்தரவு ரத்து
மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 'கடந்த, 10 ஆண்டு களாக, எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கப்படுகிறது.
'சொத்துக்களுக்கு உயில் எழுதி வைப்பது பொருந்தும்; விருதுகளுக்கு பொருந்தாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அதை ஏற்ற நீதிபதிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், பாடகர் கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை விதித்திருந்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.
'கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருது வழங்க தடையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'உயர் நீதிமன்றம் விருது வழங்க அனுமதியளித்துள்ளது. இந்த மாதம் அதற்கான விழா நடக்கவிருப்பதால், வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்' என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், 'இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. ஒருவேளை விருதை வழங்கி விட்டால், அதை நீங்கள் திரும்பப் பெறலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. இந்த வழக்கு வரும், 16ம் தேதி விசாரிக்கப்படும்' என தெரிவித்தனர்.