நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் விதிப்பதை விட ஜாமின் மறுப்பதே நல்லது ஐகோர்ட் கருத்து
நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் விதிப்பதை விட ஜாமின் மறுப்பதே நல்லது ஐகோர்ட் கருத்து
ADDED : ஜன 30, 2025 02:53 AM
சென்னை:'ஜாமின் வழங்கப்பட்ட பின்னும் கைதிகள் சிறையில் வாடுவது, அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும்' என, கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜாமின் பெற்ற அனைத்து கைதிகளும் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
வேலுார் சிறையில் உள்ள பெண் கைதிக்கு, ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது; நிபந்தனைகளும் விதித்திருந்தது. ஜாமின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், 300 நாட்கள் ஆகியும் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியானதை அடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் எடுத்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, மாநிலம் முழுதும், 104 கைதிகள் ஜாமின் பெற்ற பிறகும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் சிறையில் வாடுவதாகக் கூறி, அதுகுறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் கே.சுதா, ''கைதிகள் சிறையில் சட்ட உதவி மற்றும் பிற உதவிகளை பெறுவதை உறுதி செய்ய, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை ஆஜராகி, ''சில நேரங்களில் ஜாமின் நிபந்தனைகள் மிகவும் கடுமையாக விதிக்கப்படுகின்றன. கைதிகள் அதை நிறைவேற்றுவது சாத்தியமற்றது என்பதால், சிறையில் தொடர்ந்து இருக்க நேரிடுகிறது,'' என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கைதிகள் சிறையில் இருந்து விடுதலை பெற உதவும் வகையில், ஜாமின் நிபந்தனைகளை மாற்றியமைக்க, நீதிமன்றத்தில், சட்டப் பணிகள் ஆணைக் குழு மனு தாக்கல் செய்ய வேண்டும். ஒரு சில வழக்குகளில், அரசு ஊழியர்களிடம் ஜாமின் உத்தரவாதம் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமின் பெற, எந்த அரசு ஊழியர் உத்தரவாதம் அளிக்க முன்வருவார்?
இத்தகைய நிபந்தனைகள், பணம் பெற்று கொண்டு ஜாமின் உத்தரவாதம் வழங்கவும், பணத்தை கறக்கவும் வழிவகுக்கும். கைதிகள் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து, ஜாமின் வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை.
இதுபோன்ற சாத்தியமற்ற அல்லது கடுமையான ஜாமின் நிபந்தனைகளை விதிப்பதை விட, விசாரணை நீதிமன்றங்கள் ஜாமின் வழங்க மறுப்பது நல்லது. எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
புதுச்சேரி அரசு வழக்கறிஞர் கே.எஸ்.மோகன்தாஸ், புதுச்சேரி சிறைகளில், 14 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜாமின் பெற்ற அனைத்து கைதிகளும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதை, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் உறுதி செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.