ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்க 'பெல்' நிறுவனத்திற்கு ஐகோர்ட் கெடு
ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்க 'பெல்' நிறுவனத்திற்கு ஐகோர்ட் கெடு
ADDED : டிச 07, 2025 02:12 AM

சென்னை: திருச்சி 'பெல்' நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் 1,121 பேரை, நான்கு மாதங்களில் வரன்முறைப்படுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச் சங்க பொதுச்செயலர் எம்.சேகர் தாக்கல் செய்த மனு:
திருச்சியில் மத்திய அரசின், 'பெல்' எனப்படும், 'பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்' நிறுவனத்தில், 1,121 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
பணியாளர்களின் செலவினங்களை குறைக்க, ஒப்பந்த தொழிலாளர் முறையை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்து, 2015ல் தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இ வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஆவணங்களை முறையாக பரிசீலிக்காமல், தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
சங்கத்தின் உறுப்பினர்கள், பெல் நிறுவன ஊழியர்களாகத் தான் கருதப்பட வேண்டும். ஆண்டில் 240 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவரையும், நிரந்தர ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளுடன், அவர்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டும். இதை, நான்கு மாதங்களில் செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

