கட்டாய கல்வி உரிமை சட்ட நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கட்டாய கல்வி உரிமை சட்ட நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 11, 2025 01:27 AM
சென்னை:'கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலித்து, சட்டப்படி உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 'தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கான, 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சேர்க்கை, இதுவரை துவங்கவில்லை' என கூறி, கோவையை சேர்ந்த வே.ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2025 - 26ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையை துவங்குவது தொடர்பாக, ஏப்., 22, 30 மற்றும் மே 8ல் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, மாணவர் சேர்க்கையை துவங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ''புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 25 சதவீத ஏழை மாணவர்களுக்கான கல்வி கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை. நாடு முழுதும் பல மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை,'' என்றார்.
தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''ஒப்பந்தத்தில் கையெழுத்திடா விட்டால் நிதி தர மாட்டோம் என்று கூறுவது, மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மை காட்டுகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை ஒதுக்க முடியவில்லை. கடந்த 2021 முதல் 2023ம் கல்வியாண்டு வரை, மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. 100 சதவீதம் தொகையை, மாநில அரசு தான் வழங்கியது,'' என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு தன் கடமையை நிறைவேற்ற வேண்டும். சமக்ரா சிக் ஷா திட்டம் என்பது, புதிய கல்வி கொள்கையை- அமல்படுத்துவது தொடர்பானது என்பது உண்மை. ஆனால், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழுள்ள கடமைகள் சுதந்திரமானவை. கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பொறுப்புகள், மத்திய,- மாநில அரசுகளுக்கு உள்ளன.
கல்வி உரிமை சட்டத்தின் படி, மத்திய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை, மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இதை தேசிய கல்வி கொள்கையுடன் இணைக்க அவசியம் இல்லை.
தமிழக அரசு, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது என்பதால், இதுதொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
எனவே, 2024 -- 25ம் நிதியாண்டில் சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ், 3,585.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட வேண்டும். இதில், 2,151.59 கோடி ரூபாய், மத்திய அரசின் பங்கு. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதி, 200 கோடி ரூபாய்க்கும் குறைவானது என்பதால், இந்த நிதியில் மத்திய அரசின் பங்கை ஒதுக்குவதில், எந்த சிக்கலும் இருக்காது.
எனவே, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, சமக்ரா சிக் ஷா திட்டத்தில் இருந்து நீக்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அந்த சட்டப்படி உரிய நிதியை, தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். சட்டத்தில் கூறியபடி, உரிய கால கட்டத்தில், இந்த தொகையை தனியார் பள்ளிகளுக்கு, எவ்வித பாரபட்சமும் இன்றி, தமிழக அரசு வழங்க வேண்டும்.
மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை என்று கூறாமல், இந்த சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை, மாநில அரசும் ஒதுக்கீடுசெய்ய வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.