'என்கவுன்டர்' மிரட்டல் விடுத்த விவகாரம் முன்னாள் ஏ.சி., மீதான நடவடிக்கை நிறுத்தம் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
'என்கவுன்டர்' மிரட்டல் விடுத்த விவகாரம் முன்னாள் ஏ.சி., மீதான நடவடிக்கை நிறுத்தம் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஏப் 06, 2025 01:09 AM
சென்னை:'என்கவுன்டர்' செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த, போலீஸ் முன்னாள் உதவி கமிஷனர் இளங்கோவன் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டுக்கு, கடந்தாண்டு ஜூலையில் போலீசாருடன், அப்போதைய உதவி கமிஷனர் இளங்கோவன் சென்றார். ரவுடியின் மனைவியிடம், 'உங்கள் கணவர் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால், கை, கால்கள் உடைக்கப்படும். கத்தியை எடுத்து கொலை வழக்கில் சிக்கினால், என்கவுன்டர் தான்' என, எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, உதவி கமிஷனரின் மிரட்டல் பேச்சு குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. உதவி கமிஷனர் உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் இளங்கோவன் தரப்பில், 'என் தரப்பு விளக்கத்தை அளிக்க போதிய அவகாசம் வழங்காமல், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது, பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன்' என, வாதிடப்பட்டது.
ஆணையம் தரப்பில், 'உரிய நடைமுறைகளை பின்பற்றி, மனுதாரருக்கு விளக்கமளிக்க அவகாசம் வழங்கிய பின் தான், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது' என்று, தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
முழு அளவில் விசாரணை நடத்தப்படாத நிலையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு, மனுதாரருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, மனித உரிமைகள் ஆணையத்தின் இறுதி உத்தரவு வரும் வரை, மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்.
தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, ஆணையம் விரைந்து முடிக்க வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.