மயிலாடுதுறை -- காரைக்குடி நேரடி ரயில் 3 மாதத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
மயிலாடுதுறை -- காரைக்குடி நேரடி ரயில் 3 மாதத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : மே 30, 2025 12:18 AM
சென்னை:மயிலாடுதுறை-- - காரைக்குடி நேரடி பயணியர் ரயில் சேவையை மீண்டும் துவக்க கோரிய விண்ணப்பத்தை, மூன்று மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்க, தெற்கு ரயில்வேக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கை மனு
மயிலாடுதுறையை சேர்ந்த, விஸ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் வாஞ்சி நாதன் தாக்கல் செய்த மனு:
மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில், சோழ பேரரசால் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில்கள் உள்ளன.
சூரியனார் கோவில், சுக்கிரன் கோவில், திருமணஞ்சேரி கோவில், வைஷ்ணவ திவ்யசேதங்கள் போன்றவை உள்ளன. இக்கோவில்களுக்கு, உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இவர்கள் வசதிகாக, மயிலாடுதுறை - - காரைக்குடி பயணியர் ரயில், குறைந்த கட்டணத்தில், இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வந்தது.
அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். கடந்த ஆண்டு மே 3ம் தேதி முதல், பொது மக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல், மயிலாடுதுறை- - காரைக்குடி பயணியர் ரயில் சேவை, திடீரென நிறுத்தப்பட்டது.
எனவே, இந்த பயணிகள் ரயில் சேவையை, மீண்டும் துவக்கும்படி அளித்த கோரிக்கை மனுக்கள், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.
விசாரணை
இது தொடர்பாக, கடந்த மார்ச் 15ல் ரயில் துறை அதிகாரிகளுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, மயிலாடுதுறை- - காரைக்குடி நேரடி பயணியர் ரயில் சேவையை, மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, டி.வி.தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் புர்ஜித் நாராயணன், எம்.வெங்கடேசன் ஆஜராகி,''நேரடி பயணியர் ரயில் சேவை, திடீரென ரத்து செய்யப்பட்டதால், இந்த பாதையில் இருபுறமும் அமைந்துள்ள, சோழர் கால கோவில்களை வழிபட்டு வந்த, வழிபாட்டாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
ரயிலை மீண்டும் இயக்கினால், ஆன்மிக சுற்றுலா பயணியர், மாணவர்கள், வணிகர்கள் பெரிதும் பயனடைவர்'' என்றார்.
இதையடுத்து, ரயிலை மீண்டும் இயக்குவது குறித்து ரயில்வே துறை தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை, மூன்று மாதத்திற்குள் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க, தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தனர்.