நிலம் கையகத்திற்கு இழப்பீடு தாமதம்; டாஸ்மாக் கடை வருமானம் டிபாசிட் உயர்நீதிமன்றம் உத்தரவு
நிலம் கையகத்திற்கு இழப்பீடு தாமதம்; டாஸ்மாக் கடை வருமானம் டிபாசிட் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : அக் 12, 2025 05:11 AM
மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அம்மாவட்ட டாஸ்மாக் கடைகளின் தினசரி வருமானத்தை கீழமை நீதிமன்றத்தில் டிபாசிட் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
நான்குவழிச்சாலை திட்டப் பணிக்காக சிலரது நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க திண்டுக்கல் நீதிமன்றம் 2021ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கலெக்டர் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:நிலம் கையகப்படுத்துதல் 2017 ல் நடந்தது. மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் 2023 ல் இந்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. குறைக்கப்பட்ட இழப்பீட்டு தொகையை டிபாசிட் செய்ய வேண்டும்.
இதை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு இந்நீதிமன்றம் 2025 மார்ச் 14 ல் உத்தரவிட்டது.வழக்கு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அரசு தரப்பில் அவகாசம் கோரியும், அவ்வாறு செய்யவில்லை. இந்நீதிமன்ற உத்தரவையும் நிறைவேற்றவில்லை. இச்சூழலில் இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளின் தினசரி முழு விற்பனைத் தொகையை அம்மாவட்ட நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற ஆணையம் / முதன்மை மாவட்ட நீதிபதியிடம் மறு உத்தரவு வரும் வரை டிபாசிட் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.