அ.தி.மு.க., டவுன் பஞ்., தலைவியை தகுதி நீக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு
அ.தி.மு.க., டவுன் பஞ்., தலைவியை தகுதி நீக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு
ADDED : மே 17, 2025 01:11 AM
மதுரை:கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சி தலைவியை தகுதி நீக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தேரூர், தேவகுளம் அய்யப்பன் தாக்கல் செய்த மனு:
தேரூர் பேரூராட்சி 2வது வார்டில் வென்ற அ.தி.மு.க.,வை சேர்ந்த அமுதாராணி, தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் எனக்கூறி, தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவர் பட்டியலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்கும், வின்சென்ட் என்பவருக்கும் இடையே இந்திய கிறிஸ்துவ திருமண சட்டத்தின் கீழ் 2005ல் சர்ச்சில் திருமணம் நடந்தது. இதன்படி அமுதாராணி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. திருமணத்தின் போது, கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்.
ஒருவர், ஹிந்து, சீக்கியம் மற்றும் பவுத்தம் தவிர வேறு எந்த மதத்திற்கும் மாறியவுடன், சட்டப்படி பட்டியல் சமூகத்திற்குரிய இட ஒதுக்கீடு பலன்களை பெற முடியாது. அமுதாராணியை தகுதி நீக்க குமரி கலெக்டர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், தேரூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு 2023ல் மனு அனுப்பினேன். தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக அறிவிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவில், ''அமுதாராணி தலைவர் பதவிக்கு மனு செய்தபோதே, தேர்தல் அதிகாரி ஏற்றிருக்க கூடாது.
''ஆனால், அதிகாரி அப்போதைய ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொண்டது ஆவணங்களிலிருந்து தெளிவாகிறது. அமுதாராணியை தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து கலெக்டர் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

