கொட்டகை அமைத்து வாக்காளர்கள் தங்க வைப்பு; தேர்தல் கமிஷன் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
கொட்டகை அமைத்து வாக்காளர்கள் தங்க வைப்பு; தேர்தல் கமிஷன் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 30, 2025 05:40 AM

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து, வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்க கோரிய மனுவுக்கு, தேர்தல் கமிஷன் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, பிப்.5 இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தொகுதியில் உள்ள வாக்காளர்களை, முக்கிய அரசியல் கட்சிகள், கொட்டகை அமைத்து தங்க வைப்பதை தடுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி, கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியை
சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விபரம்:
கடந்த 2023ம் ஆண்டு, இதே தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், ஆளும் கட்சி கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட, ஈ.வி.கே. எஸ்.இளங்கோவனை வெற்றி பெற வைக்க, ஒவ்வொரு வார்டிலும் கொட்டகைகள் அமைத்து, அதில் வாக்காளர்கள் தங்க வைக்கப்பட்டனர். இதன் காரணமாக, மற்ற வேட்பாளர்கள், வாக்காளர்களை எளிதாக அணுக முடியவில்லை.
கொட்டகைகளில் தங்கும் வாக்காளர்களுக்கு, பணம், உணவு உள்ளிட்டவை, தடையின்றி வழங்கப்பட்டது. இதனால், அந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வி அடைய நேரிட்டது. தற்போது நடக்க உள்ள இடைத்தேர்தலிலும், கொட்டகை அமைத்து, பழைய பாணியில் வாக்காளர்களை கவர, ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் கமிஷனிடம் மனு அளித்துள்ளேன்.
தொகுதிக்குள் வரும் வெளிநபர்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும், இ- - பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க, ஆன்லைன் வசதி ஏற்படுத்த வேண்டும்.
கொட்டகை யுக்தியை தடுக்க கோரி, ஜன.,8ல் அளித்த மனுவுக்கு, தேர்தல் கமிஷன் இதுவரை பதில் அளிக்கவில்லை. எனவே, அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர்களை கவர கொட்டகை அமைக்கின்றனர் என்றால், அந்த கொட்டகைக்கு வாக்காளர்கள் எதற்காக செல்ல வேண்டும்; வாக்காளர்களுக்கு யார் தான் இலவசங்களை வழங்கவில்லை என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன், குறைந்த ஊதியம் வாங்குவோர் பஸ்சில் பணம் கொடுத்தும், அதிக ஊதியம் வாங்கும் மகளிர், இலவசமாகவும் பயணிக்கின்றனர். இது தான் ஜனநாயகம் என, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதாக கருத்து தெரிவித்து, இம்மனுவுக்கு தேர்தல் கமிஷன் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.