சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவு
சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 10, 2025 11:50 PM
சென்னை:கோவை வனப்பகுதியில், சட்ட விரோதமாக மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளை மூட உத்தரவிட கோரி, அம்மாவட்டத்தைச் சேர்ந்த கற்பகம் என்பவரும், தமிழகத்தில் உள்ள யானைகள் வழித்தடங்களை பாதுகாக்கக் கோரி, வன விலங்குகள் ஆர்வலரான எஸ்.முரளிதரன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மனு தாக்கல்
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கவரத்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் நடந்து வந்தது.
விசாரணையின்போது, கோவை மாவட்டம், ஆலந்துறை, வெள்ளிமலைப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில், சட்டவிரோதமாக குவாரிகள் நடத்தி, செம்மண் எடுக்கப்படுவதாக, சமூக ஆர்வலர் சிவா மற்றும் லோகநாதன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த சிறப்பு அமர்வு, சம்பந்தப்பட்ட பகுதிகளை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், நீதிபதியான நாராயணன், உயர் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கனரக வாகனங்கள் உதவியுடன் பெருமளவு மணல் அள்ளப்பட்டுள்ளது என, அறிக்கை வாயிலாக அறிய முடிகிறது. அறிக்கையில் இடம்பெற்ற புகைப்படங்கள், தகவல்கள் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையின் பேரூர் தாலுகா மிகவும் நன்கு வளர்ந்த மற்றும் அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. சாலை முழுதும் 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நீதிமன்றத்தில் பல விசாரணைகளில் மாவட்ட காவல் துறை எஸ்.பி., ஆஜராகியுள்ளார். அவரால் எடுத்து செல்லப்பட்ட மணல் எல்லாம் எங்கு, எந்த பகுதிக்கு சென்றது என்பது தொடர்பாக, சரியான பதிலை அளிக்க முடியவில்லை.
இதை பார்க்கும்போது, நிச்சயமாக, இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. விசாரணை செய்ததாக கூறப்படுவது வெறும் கண்துடைப்பு.
சந்தேகம்
இந்த சம்பவத்தில், உயர் அதிகாரிகள் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். அதே நேரத்தில், கள அளவிலான விசாரணை அதிகாரிகள் முழுமையான அலட்சியத்தை காட்டியுள்ளனர். இந்த முழு சம்பவத்திலும், அதிகாரிகள், உயர் அதிகாரிகளின் தொடர்பு குறித்து கடும் சந்தேகம் உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பகுதியில், திட்டமிட்டு நடக்கும் மணல் கொள்ளை குறித்து அறிய, எந்த விசாரணையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களால் மட்டுமே சாத்தியமாகும்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே, மணல் திருடியவர்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவ்வளவு அலகுகள் மணலை அகற்ற, ஏராளமான வாகனங்கள் மற்றும், 'பொக்லைன்'கள் தேவைப்பட்டிருக்கும்.
அதிலிருந்து இந்த அத்தியாயத்தின் பின்னணியில் உண்மையில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல.
ஓட்டுனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அல்லது லாரிகளின் ஒன்று அல்லது இரண்டு உரிமையாளர்களை மட்டும் குற்றம் சாட்டுவதன் வாயிலாக, இந்த வழக்குகளை முடிக்கக் கூடாது.
தனித்தனி வழக்குகள்
இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள், அதாவது பணம் கொடுத்தவர்கள், மண் வெட்டி எடுப்பதற்கு நபர்களை ஈடுபடுத்துபவர்கள் மற்றும் சப்ளையர்கள், இந்த மணல் யாருக்கு வழங்கப்பட்டது, திருடப்பட்ட சொத்தைப் பெற்றவர்கள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த வர்த்தகம் பல கோடி ரூபாய்க்கு நடப்பதாகத் தெரிகிறது. இது மிகப்பெரிய அளவில் உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணையையும், சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றுவது அவசியம்.
இந்த மணல் திருட்டு சம்பவம், மாவட்ட வருவாய் துறை, கனிம வளத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
அதிகாரிகளின் ஆதரவோடு இந்த கூட்டுக் கொள்ளை நடந்துள்ளதால், இதுதொடர்பாக உயர் நீதிமன்றமே நேரடியாக விசாரணைக் குழு அமைத்து கண்காணித்தால் தான் மேலும் உண்மைகள் வெளியே வரும்.
எனவே, சென்னை மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பி., ஜி.நாகஜோதி, ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு எஸ்.பி., ஜி.சஷாங்க் சாய் ஆகியோர், இந்த சிறப்பு குழுவில் இடம்பெறுவர்.
இக்குழு, அனைத்து வழக்குகளையும் தனிப்பட்ட முறையில் விசாரிப்பதை தவிர, 'ட்ரோன்' கணக்கெடுப்பு அல்லது அவர்களின் விசாரணை வாயிலாக கண்டுபிடிக்கப்படும் குவாரி தொடர்பான எந்தவொரு புதிய வழக்கையும் பதிவு செய்ய அதிகாரம் அளிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு புலனாய்வு குழு, சுற்றுச்சூழல் பேரழிவுடன் தொடர்புடைய தெரிந்த, தெரியாத அதிகாரிகள் மற்றும் மாபியாக்களின் தொடர்பு குறித்து, தனித்தனி வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
விசாரணை தள்ளிவைப்பு
முழு சம்பவத்திற்கும் பின்னால் உள்ள பெரிய சதித் திட்டத்தை ஆராய்ந்து, ஏதேனும் திட்டமிடப்பட்ட குற்றம் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் உள்ள பெரிய மீன்களை பிடித்து, அவர்களின் குற்றங்களை சட்டத்தின் முன் நிறுத்த எந்த தடையும் கிடையாது.
கடந்த நான்கு ஆண்டுகளில், இப்பகுதிகளில் பணிபுரிந்த வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளின் சொத்து விபரங்கள் குறித்து விசாரித்து, லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா பல்கலையுடன் இணைந்து, தானியங்கி கண்காணிப்பு நடைமுறையை உருவாக்கி, மணல் கொள்ளையை கண்காணிப்பது, தோண்டப்பட்ட குழிகளை நிரப்புவது உள்ளிட்ட தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உத்தரவை அமல்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப்., 27க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.