விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க துப்பாக்கி உரிமம் உயர்நீதிமன்றம் உத்தரவு
விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க துப்பாக்கி உரிமம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 06, 2025 01:44 AM
மதுரை:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் விவசாய நிலத்தில் பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க விவசாயிக்கு துப்பாக்கி உரிமம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கொடைக்கானல் வடகவுஞ்சி நியாஸ் அகமது தாக்கல் செய்த மனு: வடகவுஞ்சியில் எனது விவசாய நிலம் உள்ளது. அதில் 2021 ல் யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தின. தமிழக அரசிடம் இழப்பீடு கோரினேன். வாழை மரங்கள் சேதமடைந்ததற்கு ரூ.38 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, (எஸ்.பி.பி.எல்) ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்கக்கோரி திண்டுக்கல் கலெக்டரிடம் விண்ணப்பித்தேன். அவர் விசாரணை நடத்தினார். வாழை, காபி, எலுமிச்சை, வெண்ணெய் பழம் பயிரிடுகிறேன். காட்டுப் பன்றி, யானைகள் அடிக்கடி பயிர்களை சேதப்படுத்துகிறது என தெரிவித்தேன். உரிமம் கோரிய மனுவை நிராகரித்தார். அதை எதிர்த்து தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலரிடம் மேல்முறையீடு செய்தேன். அவர் நிராகரித்தார். அதை ரத்து செய்து உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: அதிகாரிகள் பரிந்துரைத்தபடி பட்டாசு வெடிப்பது வனவிலங்குகள் நுழைவதைத் தடுக்க உதவாது.
அரசு தரப்பு: துப்பாக்கி வைத்திருப்பது அடிப்படை உரிமை இல்லை. மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால் அப்பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கோருவர். இது வனவிலங்குகளை வேட்டையாட வழிவகுக்கும். வனவிலங்குகளை சமாளிக்க பட்டாசு வெடிக்கும் வழக்கமான முறையே போதுமானது.
நீதிபதி: துப்பாக்கி வைத்துக் கொள்வது அடிப்படை உரிமை இல்லை என அரசு தரப்பு கூறுவதை ஏற்கிறேன். இருப்பினும், சில சூழ்நிலைகளில் உரிமம் வழங்க கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது. பயிர் பாதுகாப்பிற்காக ஒரு நபருக்கு துப்பாக்கி உரிமம் தேவைப்படுவது அத்தகைய ஒரு சந்தர்ப்பமாகும்.
பயிர் பாதுகாப்பிற்கு பட்டாசுகள் வெடிப்பது போதுமானதாக இருக்குமா என்பது, ஆயுதச் சட்டத்தை இயற்றும் போதே பார்லிமென்ட்டில் விவாதிக்கப்பட்டது. பயிர் பாதுகாப்பிற்கு உரிய வகை துப்பாக்கிக்கு உரிமம் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
வனவிலங்குகளால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஏற்கனவே மனுதாரருக்கு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. பட்டாசு வெடித்தால் போதுமானது என்ற அதிகாரிகளின் கருத்து திருப்திகரமாக இல்லை. மனுதாரருக்கு எதிராக கிரிமினல் வழக்கு எதுவும் இல்லை. பயிர் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வழங்குவது பொது அமைதி அல்லது பாதுகாப்பை பாதிக்கும் என கருத முடியாது.
நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆயுத சட்டம் நிபந்தனைகளை பின்பற்றி பயன்படுத்தும் வகையில் உரிய வகை துப்பாக்கிக்கான உரிமத்தை மனுதாரருக்கு கலெக்டர் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.