கனகசபை தரிசன நுழைவு வாயில் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
கனகசபை தரிசன நுழைவு வாயில் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
ADDED : அக் 16, 2025 11:34 PM
சென்னை: 'சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபையின் மேற்கு நுழைவாயிலில் இருந்து, பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே, வெளியே வர அனுமதிக்கப்படும் பகுதியை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபம் மீது ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து, தமிழக அரசு கடந்த 2022ல் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சபாநாயகர் கோவில் செயலர் சிவராம தீட்சிதர் உள்ளிட்டோர், வழக்கு தொடர்ந்தனர்.
அறிக்கை கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கனகசபை மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்ய, யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனு தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் கே.ஹரிசங்கர் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன் விபரம்:
கோவிலுக்கு வருகை தரும் வி.ஐ.பி.,க்கள் மற்றும் அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கு, கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய, முதல் முன்னுரிமை வழங்கப்படும்.
இதில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநில கவர்னர்கள், முதல்வர்கள், எம். பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் போன்றோர் அடங்குவர்.
ஆறு கால பூஜைகளுக்கு இடையிலான நேரத்தில், கனகசபையின் மேற்கு நுழைவாயிலில் இருந்து, பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே, வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த ஏற்பாடு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, பக்தர்களின் பாராட்டை பெற்றுள்ளது. சிறப்பு நிகழ்வுகள் மற்றும் கோவிலில் பக்தர்களின் வருகை, பன்மடங்கு அதிகரிக்கும் நாட்கள் போன்ற சூழல்களில், பக்தர்கள் பாதுகாப்பு, சீரான நிர்வாகத்தை உறுதி செய்ய, தற்காலிகமாக மாற்றங்கள் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரச்னை தீரும் அப்போது அறநிலையத் துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''கனகசபையின் மேற்கு நுழைவாயிலில் இருந்து, பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே, வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியவில்லை. உள்ளே செல்ல ஒரு வழியையும், வெளியே வர ஒரு வழியையும் பயன்படுத்தினால் பிரச்னை இருக்காது. இங்கு உள்ளே, வெளியே செல்ல இரண்டு வழிகள் உள்ளன,'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், 'கனகசபையின் மேற்கு நுழைவாயிலில் இருந்து, பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே, வெளியே நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
'இவற்றையும், அங்குள்ள நவ துவாரங்கள் குறித்தும் நேரில் ஆய்வு செய்து, இரண்டு வாரங்களில் புகைப்படத்துடன், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர். விசாரணையை நவ., 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.