கால்நடைகளை எடுத்து செல்ல வழிகாட்டுதல்கள் கட்டாயம் பின்பற்ற ஐகோர்ட் உத்தரவு
கால்நடைகளை எடுத்து செல்ல வழிகாட்டுதல்கள் கட்டாயம் பின்பற்ற ஐகோர்ட் உத்தரவு
ADDED : பிப் 04, 2025 11:53 PM
சென்னை:'ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு, கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது, போதுமான இடைவெளியுடன், உணவு, குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்' என, அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான வழிகாட்டுதல்களை, கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு, மூன்று கன்டெய்னர் லாரிகளில், 117 மாடுகள், இரண்டு கன்றுகள், இறைச்சிக்காக, சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்தது.
கோ சாலை
இந்த புகார்களின் அடிப்படையில், செங்கல்பட்டு மற்றும் அச்சிறுப்பாக்கம் போலீசார், லாரிகளை மடக்கி, அதிலிருந்த கால்நடைகளை மீட்டு, திருவள்ளூரில் உள்ள கோ சாலையில் ஒப்படைத்தனர்.
'இந்த கால்நடைகள், ஆந்திராவில் இருந்து விவசாயம் மற்றும் இனப்பெருக்கத்துக்கு, உரிய உரிமங்களுடன் கொண்டு வரப்பட்டன; அவை துன்புறுத்தப்படவில்லை.
எனவே, அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என, அவற்றின் உரிமையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவு:
முதல் கட்ட விசாரணை மற்றும் கால்நடை மருத்துவர் அறிக்கை வழியே, 'கால்நடைகள் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு, சுகாதாரமற்ற சூழ்நிலையில் கொண்டு செல்லப்பட்டன.
அவை 10 வயதுக்கு உட்பட்டவை. அவை துாங்காமல் இருக்க, மிளகாய் பொடிகளை, கால்நடைகளின் கண்களில் வைத்துள்ளனர்' என்பது தெரிய வந்துள்ளது. இந்த செயல் அப்பட்டமான சட்ட விதிமீறல். வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட கால்நடைகளில், பலவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது.
அவ்வாறு இருக்கும்போது, அவை இனப்பெருக்கத்திற்கு கொண்டு வரப்பட்டன என்கிற வாதம் ஏற்புடையதல்ல. மனிதத் தன்மையற்ற முறையில், அவை கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கால்நடைகளை வாகனங்களில் எடுத்து செல்லும்போது, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், கால்நடைகள் போக்குவரத்து விதிகளில் கூறப்பட்டுள்ளன.
அதன்படி, சரக்கு வாகனத்தில், ஆறு கால்நடைகளுக்கு மேல் கொண்டு செல்லக் கூடாது; விலங்குகள் பயணிக்க தகுதியானவை என்பதற்கு, தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரின் சான்றிதழ் இருக்க வேண்டும்; அனுப்புபவர் மற்றும் பெறுபவரின் பெயர், முகவரியுடன் கூடிய அட்டை, ஒவ்வொரு கால்நடையிலும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
மனு தள்ளுபடி
இந்த வழக்கில், எதுவும் பின்பற்றப்படவில்லை. எனவே, மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களை, விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சரிதான்.
கால்நடைகளை பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் கொண்டு செல்லும் போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது லாரிகளில் கால்நடைகள் நிற்க, போதுமான இடவசதி இருக்க வேண்டும்.
முறையான காற்று வசதியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும்.
முறையான ஆவணங்களுடன் மட்டுமே கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.