கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களால் மிரட்டல் அதிகாரிகள் பாதுகாப்புக்கு ஐகோர்ட் உத்தரவு
கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களால் மிரட்டல் அதிகாரிகள் பாதுகாப்புக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : நவ 21, 2024 02:00 AM

மதுரை:கரூர் வெண்ணெய் மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை கருதி, கோவில் செயல் அலுவலர், அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க, எஸ்.பி.,க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இதற்கு சொந்தமாக கத்தப்பாறை, அதுார் பகுதியில் உள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.
கடந்த 2019 அக்., 23ல் இரு நீதிபதிகள் அமர்வு, 'நிலத்தை மீட்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் அறநிலைய துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி நேற்று பிறப்பித்த உத்தரவு:
கோவில், அதன் சொத்துக்களை பாதுகாக்க, நிர்வகிக்க அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. கோவில்களுக்கு பல ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. நிர்வாகச் சீர்கேடு காரணமாக, பல கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பாளர்கள் செல்வாக்கு, அதிகாரமிக்கவர்கள், ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களாக உள்ளனர். எந்த ஒரு அதிகாரியையும் கடமையை செய்யவிடாமல் தடுத்தால், அது தீவிரமாக பார்க்கப்படும்.
வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், திருப்பத்துார் அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவிடாமல் தடுத்துள்ளனர். இதை அனுமதிக்க முடியாது.
கோவில் செயல் அலுவலர், திருப்பத்துார் இணை கமிஷனர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க கரூர் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறநிலையத்துறைக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.
கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களில் அரசுத்துறையில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள், தொழிலதிபர்கள், செல்வாக்கு மிக்க நபர்கள் பற்றிய விபரங்களை, அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜனவரி முதல் வாரம் ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.