பள்ளி, கல்லுாரி பெயர்களில் உள்ள ஜாதியை நீக்க ஐகோர்ட் உத்தரவு
பள்ளி, கல்லுாரி பெயர்களில் உள்ள ஜாதியை நீக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஏப் 17, 2025 12:59 AM
சென்னை:'கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை, நான்கு வாரங்களில் நீக்க வேண்டும்; இல்லையெனில், அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, அந்த சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, ஜாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவக்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும், பள்ளி, கல்லுாரிகளின் பெயரில் உள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்தும், தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் விரிவான உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.
அதன் விபரம்:
↓சங்கத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கி, சங்க சட்ட திட்டங்களில் திருத்தங்கள் செய்து, அரசை அணுக வேண்டும். ஜாதிகளின் பெயரில் சங்கங்களை பதிவு செய்யக்கூடாது என, அனைத்து பதிவாளர்களுக்கும், பதிவுத்துறை ஐ.ஜி., சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்
↓சங்கங்களின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கி, சட்ட திட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களை, சட்ட விரோதமானதாக அறிவித்து, அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும்
↓ஜாதி சங்கங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயரை நீக்கி, சங்க சட்ட திட்டங்களில் திருத்தங்கள் செய்யும் பணிகளை, மூன்று மாதங்களுக்குள் துவக்கி, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்
↓ஜாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிகள், கல்லுாரிகள் போன்ற கல்வி நிறுவனங்களின் பெயர் பலகைகளில், ஜாதி பெயர்கள் இடம்பெறக் கூடாது
↓கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர்களை, நான்கு வாரங்களில் நீக்க வேண்டும். இல்லையென்றால், அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை, அரசு ரத்து செய்ய வேண்டும்
↓அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற பெயர்களை மாற்றி, 'அரசு பள்ளி' என, பெயர் சூட்ட வேண்டும்
↓பள்ளிகளில் நன்கொடையாளர்கள் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும். அவர்களின் ஜாதி பெயர் இருக்கக் கூடாது. வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டனர் என்ற காரணத்திற்காக, பிள்ளைகளை பெற்றோரே கொலை செய்யும் நிலை நிலவுகிறது.
அதேபோல், கைகளில் ஜாதி கயிறு கட்டிக் கொண்டு, மாணவர்கள் அரிவாளுடன் வகுப்பறைக்கு வந்து தாக்குதல்கள் நடத்துவதால், இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு கூறிய நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.